- °C
Are You a business owner?
List Your Business / ADகோவை: கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவர்கள் ஆராய்ச்சிப் படிப்பு படிக்க ரூ. 1 லட்சம் வழங்கும் திட்டத்தில் பயனடைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் உயர் கல்வி பயிலும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மாற்றுத் திறனாளிகளின் நலத் துறை மூலம் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக முதலமைச்சரின் ஆராய்ச்சி 2 (Chief Minister Research Fellowship) 2024-2025 முதல் முழு நேர மற்றும் பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு (Ph.D) பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1 லட்சம் வீதம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த கல்வி உதவித் தொகை முழு நேர மற்றும் பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு (Ph.D) பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். வருமான உச்சவரம்பு ஏதும் இல்லை. இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் முழு நேர அல்லது பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு பயில்பவராக இருக்க வேண்டும். ரூ. 1 லட்சம் ஊக்கத் தொகையானது ஆராய்ச்சிப் படிப்புக்கான ஆய்வறிக்கை வாய்மொழித் தேர்வு தேதி (Thesis Viva Date) வழங்கப்பட்டதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தவுடன் இத்தொகை முழுவதுமாக வழங்கப்படும். ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவர்கள் தங்களது விண்ணப்பத்துடன், மாற்றுத் திறனாளி அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) ஆதார் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், முழு நேர அல்லது பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு பயில்வதற்கான உரிய பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து பெற்ற ஆராய்ச்சி படிப்பிற்கான ஆய்வறிக்கை, வாய்மொழி தேர்வு தேதி (Thesis Viva Date), வழங்கப்பட்டதற்கான ஆதாரம் மற்றும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டதற்கான இருப்பிடச் சான்று (Nativity Certificate) ஆகியவற்றை விண்ணப்பத்துடன் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த தகுதிகளுடைய மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து இத்திட்டத்தில் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.
Copyrights © 2024 . All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.